தமிழகம் - ஆந்திரா, தெலங்கானா இடையிலான நட்புறவை கெடுக்க சதி: கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம்


தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கிடையிலான நட்புறவை கெடுக்கும் வகையில் நடிகை கஸ்தூரி திட்டமிட்டு அவதூறு பேசியதாகக் குறிப்பிட்டு, அவருக்கு முன்ஜாமீன் வழங்க தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்களை அவதூறாகப் பேசியதாக மதுரை திருநகர் போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் வாதிடும்போது, "குறிப்பிட்டசமூகத்தினர் நடத்திய கூட்டத்தில், தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியுள்ளார். அவரது பேச்சு சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும், இரு சமூகங்களிடையே மோதலை உருவாக்கும் வகையிலும் உள்ளது. மேலும், இந்தப் பேச்சு முழுக்க உள்நோக்கம் கொண்டது.

பொது இடத்தில் ஒரு சமூகத்தை அவதூறாகப் பேசிவிட்டு, பின்னர் வருத்தம் தெரிவிப்பதால், அந்த சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்க முடியாது. மனுதாரர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளாகும். மனுதாரர் மீது 6 வழக்குகள் பதிவாகி உள்ளது. எனவே, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என்றார்.

கஸ்தூரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம் வாதிடும்போது, "சென்னை கூட்டத்தில் மனுதாரர் சிலரை குறிப்பிட்டே அவ்வாறு பேசினார். மொத்த சமூகத்துக்கு எதிராக அவர் பேசவில்லை. இருப்பினும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அதன் பிறகும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதில்லை. எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்றார்.

அப்போது நீதிபதி, "குறிப்பிட்ட சிலர் குறித்துதான் மனுதாரர் பேசினார் என்று கூறுகிறீர்கள். அந்த குறிப்பிட்ட சிலரைப் பற்றிப் பேசும்போது, அந்தப்புரம் ஏன் வருகிறது? தெலுங்கு பேசும் பெண்கள் ஏன் வருகிறார்கள்? மனுதாரர் வருத்தம் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவு, அவர் பேசியதை நியாயப்படுத்துவதுபோல உள்ளது. அந்த குறிப்பிட்ட வார்த்தைகளுக்காக அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை" என்றார். அதற்கு ஏ.கே.ஸ்ரீராம், "மனுதாரர் தெலுங்கு பேசும் பெண்களை அவதூறாகப் பேசவில்லை" என்றார்.

தொடர்ந்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன், "தமிழகத்துக்கும், கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்குமிடையே சில பிரச்சினைகள் உள்ளன. தமிழகத்தின் நட்பு மாநிலங்களாக இருப்பது ஆந்திரா மற்றும் தெலுங்கானாதான். திருப்பதி செல்லும் பக்தர்களில் 40 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவ்விரு மாநிலங்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள நட்புறவைக் கெடுக்கும் வகையில், முன்கூட்டியே திட்டமிட்டு கஸ்தூரி இவ்வாறு பேசியுள்ளார்.

சென்னைக் கூட்டத்தில் ஒரே கொள்கையுடைய பல்வேறு சமூகத்தினர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் மொழிரீதியாக பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார்கள். இதை அனுமதித்தால், சமூக நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்படும். மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால், அவரைப்போல மற்றவர்களும் பேசத் தொடங்குவார்கள். எனவே, முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என்றார். இதையடுத்து, கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை தீர்ப்புக்காக நவ. 14-ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்

x