ராமேசுவரம் / நாகப்பட்டினம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி பாம்பன் பாலத்தில் நேற்று மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை தமிழக மீனவர்களின் 66 படகுகளை சிறைப்பிடித்து, 497 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களில் 90 பேருக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை தண்டனை மற்றும் அபராதம் விதித்து, இலங்கை சிறைகளில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 23 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இதையடுத்து, ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்கக் கோரி பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு நாட்டுப்படகு மீனவர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.
முன்னதாக, ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மறியல் போராட்டத்தை திரும்பப் பெறுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி நேற்று காலை பாம்பனில் சாலைப் பாலம் தொடங்கும் இடத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தால், ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டம் தொடங்கியபோது, மீனவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம், எஸ்.பி. சந்தீஷ் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மீனவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.