கோவை: தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை, மதுரையில் மட்டும்தான் புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் பெட் சி.டி. கருவி இருந்ததது. தற்போது கோவை, சேலம், தஞ்சாவூர், காஞ்சிபுரம், நெல்லை ஆகிய 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் தலா ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், உதவியாளர் என 4 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மையங்கள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், பிற்பகல் 4 மணி முதல் 8 மணி வரையிலும் செயல்பட வேண்டும்.
கோவையில் 2 மையங்களில் ஆய்வு செய்யப்பட்டபோது, மருத்துவர்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இரு நேரங்களிலும் மருத்துவமனைகள் இயங்குகிறதா என்பதைக் கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருபவர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மையங்கள் செயல்படும் நேரம் குறித்த விளம்பரப் பலகைகள் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பணம் தராமல் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது புகார் தெரிவித்தால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்