முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்


மதுரை பழங்காநத்தத்தில் இன்று ன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றோர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: மதுரை பழங்காநத்தத்தில் இன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதிப் படி சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது.

மேலும், 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வுக் கேற்ப உணவு மானியத்தை ஒரு மாணவர்களுக்கு ரூ.5-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் ஒட்டுமொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வுதியம் ரூ.9000 வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் விரிவுப்படுத்தி சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு மாவட்டத் தலைவர் நா.விசாலாட்சி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அனிதா வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர்கள் சகாய சாந்தி, வனிதா, சுப்புராஜ், மீனா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் சந்திரபாண்டி கோரிக்கையை விளக்கி பேசினார்.

இதில், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் நீதி ராஜா, மாவட்டச் செயலாளர் சந்திரபோஸ் ஆகியோர் பேசினர். சங்கத்தின் மாநிலச் செயலாளர் பாண்டிச்செல்வி நிறைவுரை ஆற்றினார். இதில் மாவட்ட இணைச் செயலாளர்கள் தங்கமுனீஸ், காத்தம்மாள், கார்த்திகா ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டப் பொருளாளர் இந்திராணி நன்றி கூறினார்.

x