திருப்பூர்: வெள்ளகோவில் அருகே 3 மாத ஆட்டுக்குட்டி உட்பட 3 ஆடுகளை தெருநாய்கள் கடித்ததில் அவை இன்று உயிரிழந்த சம்பவம், திருப்பூர் மாவட்ட மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கயம் வட்டம் வெள்ளகோவில் செங்காளிபாளையத்தை சேர்ந்த ப.நல்லசாமி என்பவரது தோட்டத்தில் இன்று (நவ.12) புகுந்த தெருநாய்கள், பட்டியில் இருந்த ஆடுகளை கடித்தன. இதில் 3 மாத ஆடு மற்றும் 2 ஆடுகள் என மொத்தம் 3 ஆடுகள் உயிரிழந்தன. சில ஆடுகள் கடிபட்டு காயம் அடைந்துள்ளன. தொடர்ந்து விவசாயி நல்லசாமி, வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தொடர்ந்து மனு ரசீது பெற்ற நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஆடுகள் அடக்கம் செய்யப்பட்டன. நாய் தொந்தரவு நகர்ப்புற பகுதிகள் அளவுக்கு கிராமப் புறங்களில் பெருக்கெடுத்துள்ள நிலையில், விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை சந்திக்கின்றனர்.
இது தொடர்பாக சேனாபதிபாளையம் பிஏபி கிளை கால்வாய்- 1 தலைவர் ஐயனூர் வேலுசாமி கூறும்போது,"திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் வட்டத்தில் நாளுக்கு நாள் கால்நடைகளுக்கு தொந்தரவாக தெருநாய்கள் இருந்து வருவதாக கடந்த பல மாதங்களாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறோம். சமீப மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகள், தெருநாய்களால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாநில அரசுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி கால்நடை விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாநில அரசுக்கு கால்நடைகள் உயிரிழப்பும், விவசாயிகளுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு தொடர்பாக தெரிவிக்கப்பட்டும், இதுவரை எவ்வித இழப்பீடு அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் வரும் 23ம் தேதி கால்நடைகளுடன் குடியேறும் போராட்டத்தை அறிவித்து, அதற்கான போராட்ட அறிவிப்பு பதாகைகளும் தயார் செய்யும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
பொருளாதார ரீதியாக இன்றைக்கு விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், அரசு கொள்கை முடிவாக, உயிரிழக்கும் ஆடுகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என்று ஐயனூர் வேலுசாமி கூறினார்.
தொடர்ந்து பேசிய வேலுசாமி, "கால்நடைகளை வேட்டையாடும் நாய்கள் பிரச்சினை தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்துக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுத்துவிட்டோம். தீர்வில்லாத நிலையில் வரும் 23ம் தேதி விவசாயிகள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை திட்டமிட்டுள்ளோம். காங்கயம் காளைகள், நாட்டுமாடுகள், கறவை மாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், கோழிகள் ஆகியவற்றுடன் வந்து போராட்டத்தில் பங்கேற்கிறோம்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கும் இந்த அரசாங்கம், எந்த தவறும் செய்யாமல், வாழ்நாள் முழுவதும் உழைக்கும் விவசாயிகளின் பொருளாதார உடைமைகளின் பாதிப்புக்கு உரிய இழப்பீடு தராமல் இருப்பது, உண்மையிலேயே பெரும் வேதனை மற்றும் துயரம் ஆகும்" என்று வேலுசாமி கூறினார்.