தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி: டிஆர் பாலு மற்றும் அமைச்சர்கள் அடிக்கல் அமைத்து தொடங்கி வைப்பு


தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டடம் ரூ.43.40 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி தாம்பரம் சானடோரியத்தில் உள்ள காசநோய் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு அடிக்கல் அமைத்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர், அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், மாநகராட்சி ஆணையர் சீ. பாலச்சந்தர், மண்டல குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் மாநகராட்சி புதிய கட்டிடத்தில் மாதிரி வரைப்படங்களை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் கே என் நேரு கூறுகையில்: ''புதிய மாநகராட்சி கட்டிடம் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் இதற்காக ரூ.43.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பாக முதலில் அரசு சார்பாக ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டது, அது போதாது என மேலும், தொகை தேவைப்படும் என கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ரூ.43.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தாம்பரத்தை பொறுத்த அளவில் இந்த கட்டிடத்தை விரைவில் கட்டி முடித்து முதலமைச்சர் திறந்து வைப்பார், தாம்பரம் மாநகராட்சி இன்று இருப்பதுபோல் இல்லாமல் சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய பகுதிகளையும் தாம்பரம் மாநகராட்சியில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே பெரிய மாநகராட்சியாக அமையும், உள்ளாட்சி தேர்தலுக்கு இரண்டு வருடம் உள்ளது, அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை. அதற்குள் விரிவாக்கம் செய்யப்படும் அரசு நலத்திட்டங்களை விரிவாக செயல்படுத்த தாம்பரம் மாநகராட்சி பகுதி விரிவாக்கம் செய்யப்படும்'' என்றார்.

மேலும் மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என கேட்டபோது, ''மழை பெய்யட்டும் செம்பரம்பாக்கம் ஏரி போன்ற சுற்று வட்டார பகுதியில் ஏரிகள் நிரம்பட்டும் அப்படி என்றால் தான் சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி ஆகும்'' என்றார்.

x