சென்னை: பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவினருடன், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஒருமித்த கருத்துடைய கட்சிகள்: கூட்டத்தின் முடிவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திமுக ஆட்சியை அகற்ற நினைக்கும், ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம்’’ என்றார்.
அப்படி எனில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அவர்பதில் அளித்ததாவது: பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை, இதுதான் அதிமுகவின் நிலைபாடு. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. அந்த முடிவில் அதிமுக உறுதியாக உள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தல் மட்டுமல்ல, இனி எந்த காலத்தில் தேர்தல் நடந்தாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாடு தொடரும்.
திமுக அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். முதலமைச்சர்களே பிரதமரை சந்திப்பது அரிதாக உள்ளபோது, உதயநிதி ஸ்டாலின் பிரதமரை எளிதாக சந்திக்கிறார். பாஜகவுடன் திமுகதான் மறைமுக கூட்டணி அமைத்துள்ளது. அதுபோல அதிமுக என்றும் செயல்படாது. பாஜக உடன் கூட்டணி இல்லை என்று எடுத்த முடிவு எடுத்தது தான்.
அதிமுகவை பொறுத்தவரை பாஜகவை தவிர்த்து, திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஒருமித்த கருத்துடன் உள்ள கட்சிகள் யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம். அதுகுறித்து பழனிசாமி முடிவு செய்வார். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.