சென்னை: மதுரா டிராவல்ஸ் சர்வீஸ் நிறுவனத்தின் தலைவரான வி.கே.டி.பாலன் சென்னையில் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த வி.கே.டி.பாலன், சென்னை எழும்பூரில் மதுரா டிராவல்ஸ் சர்வீஸ் நிறுவனத்தை கடந்த 1986-ம் ஆண்டு தொடங்கினார்.
சுற்றுலா பயணம், டிக்கெட் புக்கிங் தொடர்பான அனைத்து சேவைகளையும் இந்த நிறுவனம் அளித்து வருகிறது. சுற்றுலா துறையில் சிறப்பான சேவையாற்றியதற்காக, தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார்.
சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த வி.கே.டி.பாலன், நேற்று மாலை காலமானார். அவரது உடல், சென்னை மந்தைவெளியில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும்.