மதுரை: நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி,உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
சென்னையில் பிராமணர்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசும் மக்களை அவதூறாகப் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது, மதுரை திருநகர், சென்னை, திருச்சியில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் கைது செய்ய கஸ்தூரியை போலீஸார் தேடி வருகின்றனர். கஸ்தூரி தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரின்பேரில், மதுரை திருநகர் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
சென்னை கூட்டத்தில் நான் பேசும்போது, தமிழகத்துக்கு 300ஆண்டுகளுக்கு முன்பு வந்ததெலுங்கு பேசும் மக்களை தமிழர்கள் என அடையாளப்படுத்தும்போது, 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்த பிராமணர்களை ஏன் தமிழர்கள் என அடையாளப்படுத்துவ தில்லை என கேள்வி எழுப்பினேன்.
தி.க., திமுக.வின் முதுகெலும்பாக இருக்கும் தெலுங்கு பேசும்நபர்களைப் பற்றியே அப்படி குறிப்பிட்டேன். ஆனால், ஒட்டுமொத்த தெலுங்கு பேசும் மக்களை நான் அவதூறாகப் பேசியதாக பரப்பப்பட்டது. இதையடுத்து, எக்ஸ் வலைதளம் வழியாக எனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தேன்.
இந்நிலையில், அகில இந்திய தெலுங்கு கூட்டமைப்பு தலைவர் சி.எம்.கே.ரெட்டி என்னிடம் வாட்ஸ்அப் காலில் பேசி, சென்னை கூட்டத்தில் பேசியதற்காக மன்னிப்பு கோராவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டினார். சில குறிப்பிட்ட நபர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கோருமாறும் அவர் வற்புறுத்தினார். அதற்கு நான் மறுத்துவிட்டேன்.
இதையடுத்து, ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் தூண்டுதலின்பேரில் எனது பேச்சை திரித்து, தமிழ்நாடு முழுவதும் எனக்கு எதிராக குற்றவியல் புகார் அளிக்கச் செய்துள்ளார். யூடியூப் பார்வையாளர் ஒருவரின் புகாரின் அடிப்படையில் குற்ற வழக்குப் பதிவு செய்வது சட்டவிரோதம்.
முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, நான் எந்த குற்றமும் புரியவில்லை. கருத்துரிமையை ஏற்க மறுக்கும் மாநில அரசு நிர்வாகத்தின் செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது. எனது பேச்சால் எந்த கலவரமும், சமூகங்கள் இடையே மோதலும் நடைபெறவில்லை.
நான் சட்டத்தை மதித்து நடக்கும் பிரஜை. இந்த வழக்கில் நான் கைது செய்யப்படுவேன் எனஅஞ்சுகிறேன். எந்த நிபந்தனையையும் ஏற்கத் தயாராக உள்ளேன். எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.