தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதனால், நவம்பர் 17-ம் தேதி வரை பல மாவட்டங்களின் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்பு: உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா திங்கள்கிழமை பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சஞ்சீவ் கண்ணா வரும் 2025 மே 13 வரை 6 மாத காலத்துக்கு தலைமை நீதிபதியாக செயல்படுவார்.
சஞ்சீவ் கண்ணா கடந்த 1960-ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர். 1980-ம் ஆண்டு டெல்லி ஸ்டீபன் கல்லூரியில் சட்டம் பயின்றார். 2016-ம்ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2019-ம்ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு அடுத்த நிலையில் மூத்த நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இருந்தார். இவர் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர். குறிப்பாக, தேர்தல் பத்திர நடைமுறையை ரத்து செய்த ஐந்து நீதிபதி அமர்வில் சஞ்சீவ் கண்ணாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கள ஆய்வுக் குழுவிடம் இபிஎஸ் அறிவுரை: அதிமுக கள ஆய்வுக் குழு தாக்கல் செய்ய உள்ள ஆய்வு அறிக்கை உண்மை தன்மையுடனும், வெளிப்படை தன்மையுடனும் இருக்க வேண்டும். மாவட்ட செயலாளர்கள் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்றாலும் அதனை பாரபட்சமின்றி அறிக்கையில் குறிப்பிட வேண்டும். கள ஆய்வு குழு அளிக்கும் அறிக்கை மீது கட்சி உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அமேசான், பிளிப்கார்ட் நிர்வாகிகளுக்கு சம்மன்: பிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்களின் செயல் அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள், அந்நிய நேரடி முதலீட்டுச் சட்டத்தை மீறி இருப்பது விற்பனையாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தும் நோக்கில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
‘இபிஎஸ் உடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்’ - உதயநிதி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். முன்னதாக, எடப்பாடி பழனிசாமி, யாருடைய ஆட்சிக் காலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க முதல்வர் ஸ்டாலின் தயாரா என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி மனு: சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது மதுரை, சென்னை உள்பட பல இடங்களில் வழக்குப் பதிவு செயப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் கஸ்தூரியை கைது செய்ய போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், மதுரை திருநகரில் நாடார் மகாஜன சங்கம் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில திங்கள்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.
பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: அதிமுக - “பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இது எதிர்காலத்திலும் தொடரும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வயநாடு பிரச்சாரத்தில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி: வயநாடு மக்களவை இடைத்தேர்தல் பிரச்சாரம் திங்கள்கிழமை ஓயந்தது. முன்னதாக, தனது சகோதரியும், காங்கிரஸ் வேட்பாளருமான பிரியங்கா காந்தியை ஆதரித்து ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தினார். அவருடன் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, ‘அரசியலில் 'அன்பு' என்ற சொல் தவிர்க்கப்படுகிறது.
ஆனால் வயநாட்டில் கிடைத்த அனுபவம் அதன் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது. இங்கு நான் பெற்ற அன்பு அரசியலுக்கான எனது அணுகுமுறையை மாற்றிவிட்டது. உண்மையில், வெறுப்பு மற்றும் கோபத்திற்கான ஒரே மருந்து அன்பு என்று நான் நம்புகிறேன். அரசியலில் அன்புக்கு முக்கிய இடம் உண்டு என்பதை வயநாட்டு மக்கள் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளனர்’ என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் நியமனத்துக்கு எதிரான வழக்கு: ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரை சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமனம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
‘இந்தியாவுக்கு பதற்றம் இல்லை’ - ‘டொனால்டு ட்ரம்ப் உடன் பிரதமர் மோடிக்கு வலிமையான தனிப்பட்ட உறவு உள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வானதை அடுத்து பல நாடுகள் பதற்றமாக இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், அத்தகைய நாடுகளில் நிச்சயம் இந்தியா இல்லை’ என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பேஜர், வாக்கி - டாக்கி தாக்குதல்: ஒப்புக்கொண்ட நெதன்யாகு: கடந்த செப்டம்பர் மாதம் லெபனானில் நடந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அப்போது அந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் மவுனம் சாதித்து வந்தது. இந்நிலையில், முதன்முறையாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, லெபனான் பேஜர் தாக்குதல் தனது ஒப்புதலடனேயே நடந்ததாக தெரிவித்தார்.