மகனை காப்பகத்தில் சேர்க்கக் கோரி செல்போன் டவரில் ஏறி தொழிலாளி போராட்டம்


கழுகுமலை அருகே கரடிகுளத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய தொழிலாளி மாடசாமி. அவரை பத்திரமாக மீட்டு வந்த தீயணைப்புத் துறையினர்.

கோவில்பட்டி: கழுகுமலை அருகே கரடிகுளத்தில் மனநலன் பாதிக்கப்பட்ட மகனை அரசு காப்பகத்தில் சேர்க்க போலீஸார் உதவி செய்ய வலியுறுத்தி, இன்று மாலை தொழிலாளி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார்.

கழுகுமலை அருகே கரடிகுளம் சின்னகாலனியைச் சேர்ந்தவர் மாடசாமி (55). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இதில், மகள்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் வசந்த் (25), பொறியியல் படிப்பு படித்துள்ளார். இவருக்கு மனநலன் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த 9ம் தேதி கழுகுமலை காவல் நிலையத்தில் மாடசாமி மனு அளித்துள்ளார். அந்த மனுவில், "என் மகன் வசந்த் 3 குழந்தைகளை தாக்கியுள்ளார். கஞ்சா போதைக்கு அடிமையான வசந்த் அடிக்கடி தவறுகள் செய்து வருகிறார். எனவே, என் மகனை காப்பகத்தில் சேர்க்க போலீஸார் உதவ வேண்டும்” என்று மனுவில் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை கரடிகுளத்தில் உள்ள செல்போன் டவர் மீது ஏறிய மாடசாமி, போலீஸார் தான் தனது மகனை அரசு காப்பகத்தில் சேர்க்க வேண்டுமென கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜ்மோகன் தலைமையிலான போலீஸார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரலிங்கம், வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், உங்களது மகனை அரசு காப்பகத்தில் சேர்ப்பதற்கு நாங்கள் உதவி செய்கிறோம் என போலீஸார் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து அவரை செல்போன் டவரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக கீழ் இறக்கி கொண்டு வந்தனர். இதைதொடர்ந்து, மாடசாமிக்கு போலீஸார் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

x