அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சமையலறை தோட்டம்: புதுச்சேரி கல்வித்துறை செயலர் தகவல்


புதுச்சேரி: புதுச்சேரியில் ஒன்றரை ஆண்டுகளிலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் சமையலறை தோட்டம் வந்து விடும் என்று கல்வித்துறை செயலர் ஜவகர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உள்ளூர் காய்கறி, கீரைகள் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் சமையலறை தோட்டங்கள் விழிப்புணர்வுக்காக ஏற்படுத்தப்படுகிறது. புதுச்சேரியில் லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேநிலைப்பள்ளியில் சமையலறை தோட்டம் இன்று தொடக்கப்பட்டது.

கல்வித்துறை செயலர் ஜவகர் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்திட்டம் தொடர்பாக கல்வித்துறை செயலர் ஜவகர் கூறுகையில், "புதுச்சேரியில் தற்போது 65 பள்ளிகளில் சமையலறை தோட்டம் உள்ளது. மாணவர்கள் படிப்பதுடன் காய்கறி, கீரை விளைவிக்கின்றனர்.

இதன் மூலம் அவர்கள் விவசாயத்தையும் அறிவார்கள். வாழ்க்கைக்கு தேவையான விஷயத்தை கற்பார்கள். ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து பள்ளிகளிலும் சமையலறை தோட்டம் வந்துவிடும். இங்கிருந்து காய்கறி, கீரை ஆகியவற்றை அட்சயபாத்திரா எடுத்து சென்று சமைத்து அவர்களுக்கு மதியம் சத்தான உணவாக திருப்பி தருவதால் இச்சத்து குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்கும்" என்றார்.

x