சுயேச்சை எம்எல்ஏவுக்கு ரவுடி மிரட்டல்: புதுவை வணிகர்கள் ஆளுநரிடம் புகார்


பட உதவி: சாம்ராஜ்

புதுச்சேரி: சுயேச்சை எம்எல்ஏவுக்கு ரவுடி மிரட்டல் விடுத்ததால், புதுச்சேரியில் வணிகர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றபோது போலீஸார் தடுத்ததால் ஆர்ப்பாட்டம் நடத்தி ஆளுநரிடம் புகார் அளித்தனர்.

புதுவை கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை எதிரில் உழவர்கரை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு திலாஸ்பேட்டை ரவுடி ராமு (35) சில கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். நகராட்சி ஒதுக்கி கொடுத்த இடத்தை விட கூடுதலாக பல அடிக்கு இடத்தை ஆக்கிரமித்து கடை நடத்துவதால் மற்ற கடைக்காரர்களுடன் பிரச்சினை ஏற்பட்டது.

இது தொடர்பாக, ஜிப்மர் வணிக வளாக வியாபாரிகளும், புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு தலைவரும், சுயேச்சை எம்எல்ஏ சிவசங்கரனிடம் முறையிட்டனர். சிவசங்கரன் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜிடம், ஜிப்மர் எதிரில் வணிக வளாக கடைகள் ஆக்கிரமிப்பு குறித்து புகார் தெரிவித்து, நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

இதனை அறிந்த ரவுடி ராமு, ரெட்டியார் பாளையத்தில் உள்ள சிவசங்கரன் எம்எல்ஏ அலுவலகத்திற்கு நேரில் சென்று, எம்எல்ஏ-வை மிரட்டியுள்ளார். மேலும், அவரது ஆதரவாளர்களையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, எம்எல்ஏ சிவசங்கரன் அளித்த புகாரின் அடிப்படையில், ரெட்டியார்பாளையம் போலீசார், ரவுடி ராமு மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி ராமு மீது கொலை உட்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், எம்எல்ஏவை மிரட்டிய ராமுவை கைது செய்ய வலியுறுத்தி, ஜிப்மர் வியாபாரிகள் சங்கம், புதுவை வியாபாரிகள் கூட்டமைப்பை சேர்ந்த வணிகர்கள் கோரிமேட்டில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் இன்று ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்துக்கு புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு தலைவரும், எம்எல்ஏ-வுமான சிவசங்கரன் தலைமை வகித்தார்.

ஊர்வலம் ராஜீவ் காந்தி சிலை, காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலைக்கு வந்தது. அங்கு அவர்களை போலீஸார் தடுப்புகளை அமைத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கையை வலியுறுத்தி வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரவுடி ராமுவை கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கரன் எம்எல்ஏ கூறுகையில், "ஜிப்மர் எதிரே உள்ள வணிக வளாகத்தில் ராமு என்ற ரவுடி கடைகளை ஆக்கிரமித்து வைத்துள்ளார். இதுதொடர்பாக ஜிப்மர் வியாபாரிகள் சங்கத்தினர் பலமுறை புகார் கொடுத்துள்ளனர். யாரிடம் புகார் கொடுத்தாலும், புகார்கள் ரவுடிக்கே சென்றது. இந்நிலையில் தான் பொதுமக்களிடம் குறைகளை கேட்டுக் கொண்டிருந்த என்னை அவர் எம்எல்ஏ அலுவலகம் வந்து மிரட்டியுள்ளார்.

வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டும். ஆளுநர், முதல்வர், உள்துறை அமைச்சர், டிஜிபி ஆகியோரிடம் புகார் மனு அளித்தோம். போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். எம்எல்ஏவுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை கவலை அளிக்கிறது." என்று சிவசங்கரன் கூறினார்..

x