தென்காசி: அனைத்து விவசாய இயந்திரங்களுக்கும் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தென்காசி மாவட்டம், சுரண்டையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் நிறுவன தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். மாநில துணை தலைவர்கள் கண்ணையா, ஜாகிர் உசேன், மாநில செயலாளர் கோபால், சட்ட ஆலோசகர் முத்துகிருஷ்ணன், குமரேச ராஜா, தென் மண்டல செயலாளர் வென்னமலை, தென்காசி மாவட்ட செயலாளர் செல்லத்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், “தென்காசி மாவட்டத்தில் இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் நிரந்தர கட்டிடம் அமைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். காட்டுப்பன்றிகளை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
வன விலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களையும், விவசாயிகளையும் காப்பாற்ற நிரந்தர தீர்வு ஏற்படுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள், ஏரிகள், குளங்களை தூர்வாரி, மதகுகளை சீரமைக்க வேண்டும். சுரண்டை செண்பக கால்வாயில் கான்கிரீட் தளம், தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். தரணி சர்க்கரை ஆலையில் இருந்து விவசாயிகளின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவசாய கிராமங்களிலும் உலர் களம் அமைக்க வேண்டும்.
அனைத்து விவசாய இயந்திரங்களுக்கும் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். 60 வயதை கடந்த விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்களுக் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு உழவு மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆட்சியரிடமும், மாநில அளவிலான பிரச்சினைகள் குறித்து தமிழக முதல்வரிடமும் முறையிடுவது என முடிவு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறும்போது, “விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என எல்லா அரசியல்வாதிகளும் கூறுகிறார்கள். தேர்தல் முடிந்தால் நாட்டின் அடிமைகளாக விவசாயிகள் பார்க்கப்படுகின்றனர். பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
செண்பகவல்லி ஆற்று தண்ணீர் கேரளாவுக்கு செல்கிறது. அதை தமிழகத்துக்கு திறந்துவிட நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்துவிட மறுக்கின்றனர். இந்தியா முழுவதும் விவசாயிகள் வாங்கிய கடன் ரூ.1 லட்சம் கோடிதான். அதை அரசு தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் கார்ப்பரேட்களின் 24 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளனர். பெண்களுக்கு உரிமைத் தொகை தமிழக அரசு வழங்குகிறது. மகாராஷ்டிராவில் பெண்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என காங்கிரஸ் சொல்லியுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டியதுதானே” என்றார்.