புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் முன்பு கட்சியின் மீனவரணி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் மற்றும் மோதல் இன்று ஏற்பட்டது.
புதுச்சேரி வைசால் வீதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில அலுவலகம் உள்ளது. அங்கு இன்று மகளிரணியினர் தங்களது பிரிவின் குறைகளை மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.யிடம் முறையிட்டனர். இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது. செய்தியாளர் சந்திப்பு முடிந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக மீனவர் பிரிவின் நிர்வாகிகள் காங்கேயன், காலாப்பட்டு புகழேந்தி ஆகியோரிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் அணி நிர்வாகிகள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
மீனவர் அணி நிர்வாகிகளான காங்கேயன், புகழேந்தி ஆகியோர் வாக்குவாதத்துக்கு நடுவே ஒருமையில் பேசிக்கொண்டனர். பின்னர் கைகளை நீட்டி ஒருவருக்கொருவர் தாக்க முயன்றனர். அவர்களை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். இந்நிலையில், இருவரும் திடீரென தங்களது காலணிகளை கழற்றி கைகளில் வைத்தபடியே ஒருவரை ஒருவர் எச்சரித்துக்கொண்டனர். அதனையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமரசம் செய்தனர். அதைத்தொடர்ந்து இருவரும் கட்சி அலுவலகத்துக்குள் சென்றனர்.
இருப்பினும், மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலையிலும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர், இருவரையும் சமரசம் செய்ய முயன்றார். ஆனால், இருவரும் கடுமையாக ஒருவருக்கொருவர் எச்சரித்துக்கொண்டனர். ”மீனவர் அணி பிரிவு ஆலோசனைக் கூட்டத்துக்கு தன்னை கட்சித் தலைமை அழைக்காமல், தேர்தலில் கட்சியில் பிரச்சாரம் மேற்கொள்ளாதவர்களை அழைத்துப் பேசியதாகக் குற்றஞ்சாட்டிய” காங்கேயன் கோபமாக அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.