மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்: காஷ்மீர் மாணவர்களிடம் புதுவை ஆளுநர் அறிவுறுத்தல்


புதுச்சேரி: காஷ்மீரின் வளர்ச்சிக்கு பாடுபடவும், பழம்பெருமையை நிலைநாட்ட ஒன்றுப்பட்டு செயல்பட புதுவைக்கு சுற்றுலா வந்த காஷ்மீர் மாணவர்களிடம் ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தியுள்ளார்.

பாரத் தர்ஷன் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி சுற்றுலா வந்துள்ள காஷ்மீர் பகுதியை சேர்ந்த 25 மாணவர்கள் கொண்ட குழுவினர் இன்று துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து கலந்துரையாடினர். துணை நிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது, புதுச்சேரியின் சிறப்புகள், வரலாறு, பண்பாடு ஆகியவை குறித்து துணை நிலை ஆளுநர் எடுத்துரைத்தார். மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது,"நான் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு இந்த பதவிக்கு வரவில்லை. நம்மால் முடிந்தவரை சாமானிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையோடு வந்திருக்கிறேன். குஜராத்தில் பணியாற்றிய போதும் அதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டேன். நான் வசதியான குடும்பத்தில் பிறந்தவன் இல்லை. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்ததால், சாமானிய மக்களின் துன்பங்கள், பிரச்சனைகள், பசி ஆகியவற்றை புரிந்து கொள்ள முடிந்தது. நீங்கள் நல்ல கல்வி பெற்று இருக்கிறீர்கள்.

உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு காஷ்மீரின் வளர்ச்சிக்கும் அதன் மூலமாக நாட்டில் வளர்ச்சிக்கும் பாடுபட உங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மத்திய மாநில அரசுகள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. காஷ்மீரின் பழம் பெருமையை நிலைநாட்ட அனைவரும் ஒன்றுபட்டு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும்," என்று ஆளுநர் கைலாஷ்நாதன் கூறினார். துணை நிலை ஆளுநர், மாணவர்களுக்கு தேனீர் விருந்தளித்து புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார்.

x