பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை: உதகையில் பெற்றோருடன் மாணவர்கள் சாலை மறியல் 


உதகை: பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆசிரியைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடரும் சாலை மறியலால் கல்லட்டி மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த கல்லட்டி பகுதியில் பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களுக்காக சோலார் என்னும் இடத்தில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 91 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி பெற்றோர்கள் ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் திடீரென இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் பல ஆண்டுகளாக உள்ள இந்த பள்ளியில் கழிப்பிட வசதி விளையாட்டு திடல் வசதி உட்பட அடிப்படை வசதிகள் இன்றி இத்தனை ஆண்டுகள் பள்ளிக்கு சென்று வந்துள்ளதாகவும், தற்போது மழைக்காலம் நெருங்கி உள்ளதால் மேலும் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் உடனடியாக பள்ளியை சீரமைக்க வேண்டும் என கூறினர்.

திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவ, மாணவிகளால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

x