குன்றத்தூர்: 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம் பரணிபுத்தூரில் நடைபெற்றது.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆலந்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும் மாணவரணி தலைவருமான இரா.ராஜீவ்காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக 200 இடங்களில் கட்டாயம் வெல்ல வேண்டும். அதற்காக நிர்வாகிகள், தொண்டர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ``புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் கூட அதிமுக ஊழல் குறித்து பேசுவது இல்லை. ஆனால், திமுகவைப் பற்றிய குறை கூறி வருகின்றனர். அதிமுக அமைச்சர்கள் மீதும் வழக்குகள் உள்ளன. இதையெல்லாம் பேச முடியாத அவர்கள் திராவிட மாடல் ஆட்சி குறித்து பேசுகிறார்கள்.
ஆகையால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு வியூகம் அமைத்து செயல்பட வேண்டும். வெற்றி பெற செய்யக்கூடிய செயல் வீரர்கள் நீங்கள்தான். திட்டமிட்டு பணியாற்றினால் நிச்சயமாக வெற்றிபெறலாம்.
வரும் சட்டபேரவை தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்ய இப்போது முதலே தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும். பொதுமக்கள் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்துவிட்டோம். அதனால், பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு செல்லலாம். ஆலந்தூர் தொகுதியில் தண்ணீர் பிரச்சினை இல்லை. கால்வாய்கள், சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும், குறைகளை களைய உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மக்களைச் சந்திக்க வேண்டும்.
கட்சி கட்டமைப்பை பலமாக வைத்துக்கொள்ள வேண்டும். விடுபட்ட மகளிர் உரிமைத் தொகையை பயனாளிகளுக்கு விரைவில் கிடைக்க முதலமைச்சரிடம் கூறி உள்ளோம். விரைவில் அனைத்து மனுதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வரும். இன்னும் 2 மாதங்களில் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் தகுதியுள்ளவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தருவோம்.
திமுகவில் வேலை செய்பவர்கள் மட்டுமே நிலைக்க முடியும்; நடிப்பவர்கள் நிலைக்க முடியாது. ஆதலால் வருகை தந்துள்ள அனைவரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியை பெற இனிமேல் தலைமை சொல்லும் வேலையை வேகமாக செய்ய வேண்டும். திமுக ஆட்சியை ஏழாவது முறையாக மீண்டும் அமர்த்திட இன்று முதல் பணியைத் தொடங்க வேண்டும்'' என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசினார்.