சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசுக்கு 2026 சட்டப்பேரவை தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாடம் புகட்டுவார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கைவிரித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும் இதை உறுதி செய்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் துணையுடன் ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், தற்போது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தைக்கூட நடைமுறைப்படுத்த மறுப்பதன் மூலம், உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், கர்நாடகம், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் அண்மையில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களைவிட, தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதானது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று மு.க.ஸ்டாலின் மீண்டும் வாக்குறுதி அளிப்பார். அப்போது மீண்டும் ஏமாந்து விடாமல் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திமுகவுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.
அதேநேரத்தில், 2026-ம் ஆண்டில் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைத்து, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.