நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே காவிரியில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நாகப்பாளையத்தைச் சேர்ந்தவர் வினித் (21). இவர், நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவரது நண்பர்களான கல்லூரி மாணவர்கள் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டியைச் சேர்ந்த நந்தகுமார் (21) மற்றும் ஆந்திர மாநிலம் சேக்பஷ்ரூல் சாதிக் (21) ஆகியோர் நேற்று முன்தினம் வினித் வீட்டுக்கு வந்தனர்.
பின்னர், மாலையில் மூவரும் அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த வினித்தின் தாய், ஆற்றின் கரையில் தேடினார். அப்போது, 3 பேரின் செல்போன் மற்றும் காலணிகள் கிடந்தன.
தகவலறிந்து வந்த ஜேடர்பாளையம் போலீஸார் மற்றும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் நீண்ட நேரம் தேடினர். இருள் சூழ்ந்ததால் தேடும் பணியைக் கைவிட்டு, நேற்று காலை மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வினித் உள்ளிட்ட 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது தொடர்பாக ஜேடர்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.