‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் திருச்சி பதிப்பு தலைமை செய்தியாளர் காலமானார்


திருச்சி: `இந்து தமிழ் திசை' நாளிதழின் திருச்சி பதிப்பு தலைமைசெய்தியாளர் எஸ்.கல்யாணசுந்தரம்(50) நேற்று முன்தினம் இரவு திடீர் மாரடைப்பால் திருச்சியில் உயிரிழந்தார்.

மயிலாடுதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட சதாசிவம்-ஜெயலட்சுமி தம்பதியின் இளைய மகன்கல்யாணசுந்தரம் 2000-ம் ஆண்டில்தினமணி மதுரை பதிப்பில் மயிலாடுதுறை வட்டார செய்தியாளராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளராகவும், பின்னர் திருச்சி பதிப்பு தலைமை செய்தியாளராகவும் பணிபுரிந்த கல்யாணசுந்தரம், 2013-ம் ஆண்டு `இந்து தமிழ் திசை' நாளிதழ் தொடங்கியது முதல் திருச்சி பதிப்பின் தலைமை செய்தியாளராகப் பணியாற்றி வந்தார்.

விவசாயிகள், விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகள், காவிரி டெல்டா பகுதியின் வேளாண் பிரச்சினை, காவிரி நீர்ப்பாசன பிரச்சினை ஆகியவை குறித்து ஏராளமான செய்திக் கட்டுரைகளை எழுதி, அப்பிரச்சினைகளின் தீவிரத்தை அரசுக்கு உணர்த்த காரணமாக இருந்தார்.

இவருக்கு தனியார் பள்ளி ஆசிரியையான மனைவி ஜீவா, பொறியியல் படிக்கும் மகன் இறையருள், மகள் செண்பகா ஆகியோர் உள்ளனர்.

கல்யாணசுந்தரம் மறைவுக்குஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், "தமிழக முதல்வரின்அறிவுரைப்படி, கல்யாணசுந்தரம் குடும்பத்தினருக்கு பத்திரிகையாளர் நல வாரியத்தின் மூலம் உரிய நிவாரணத்தொகை வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சி தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள், பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக மயிலாடுதுறையில் தருமபுரம் சாலை அண்ணா நகர் முல்லை தெருவில் உள்ளஅவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. செய்தித் துறை உதவி இயக்குநர் பாண்டியன், விவசாய சங்கத் தலைவர்கள் பி.ஆர்.பாண்டியன், வீ.இளங்கீரன் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இன்று (நவ.11) காலை 10 மணியளவில் மயிலாடுதுறையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

x