சட்டவிரோதமாக படகில் சென்ற இலங்கை தமிழர்கள் 9 பேர் நெடுந்தீவு அருகே கைது


ராமேசுவரம்: தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக படகில் சென்ற இலங்கை தமிழர்கள் 9 பேர் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனுஷ்கோடி பகுதிக்கு 310-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வந்துள்ளனர். இவர்களைக் கைது செய்யாமல், மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக மண்டபம் முகாமில் தமிழக அரசு தங்க வைத்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நெடுந்தீவு அருகே பாக் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், சந்தேகத்துக்கு இடமாக வந்த தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்படகைச் சோதனையிட்டனர். அதில் ஒரு குழந்தை, 2 பெண்கள், ஒரு சிறுமி, 2 சிறுவர்கள் மற்றும் 3 ஆண்கள் என மொத்தம் 9 பேர் இருந்தது தெரியவந்தது.

பின்னர், நாட்டுப்படகுடன் 9 பேரையும் நெடுந்தீவுக்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர், அவர்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். முதல்கட்ட விசாரணையில், மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த விது ஸ்திகா (13), அஜய் (12), ஜித்து (12), அபிநயா (3), சுதா (38), ஞானஜோதி (46), மகேந்திரன் (50), பூவேந்திரன் (54) மற்றும் தீபன் (25) ஆகியோர், ஒரு நாட்டுப்படகை சொந்தமாக வாங்கி, அதன் மூலம் இலங்கைக்கு வந்தது தெரியவந்தது.

மண்டபம் முகாமில் தங்கியிருந்த இலங்கை தமிழர்களுக்கு நாட்டுப்படகை வாங்கிக் கொடுத்தது யார், இலங்கைக்குப் படகில் செல்ல உதவியவர்கள் யார் என்பது குறித்து மண்டபம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x