கும்பகோணம்: குழந்தைகளை சிறுவயதிலிருந்தே ஆன்மிகத்தில் ஈடுபடுத்த வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை தனியார் மண்டபத்தில் ஆன்மிக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பொன்.மாணிக்கவேல் கூறியது, தமிழகத்தின் பல கோயில்களில் உள்ள சுவாமி சிலைகள் திருடப்பட்டு வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
திருவெண்காடு கோயில் உள்ள 35 சிலைகள் மும்பையில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளை மீட்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
மேலும், வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்து கோயில்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பக்தி மார்க்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களை விளக்கு ஏற்ற செய்ய வேண்டும். இதனால் சிறு வயதிலிருந்து குழந்தைகளுக்கு பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகமாகும் என தெரிவித்தார். தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஆன்மிகவாதிகளின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.