கும்பகோணம்: சதய விழாவையொட்டி கும்பகோணம் வட்டம், உடையாளூரில், மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதி என்று அழைக்கப்படும் இடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
உடையாளூரிலுள்ள அவரது சமாதி என்று அழைக்கப்படும், லிங்கத்திற்கு ஆண்டு தோறும் அவர் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நட்சத்திரம் அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு, காலை 21 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகமும், சிறப்பலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், அவரது நினைவிடம் என்றழைக்கப்படும் இடத்தில் மரியாதை செலுத்தியப் பின் செய்தியாளர்களிடம் கூறியது,"ராஜராஜன் சோழன் இருந்ததற்கான வரலாறு மற்றும் அறிகுறிகள் இப்பகுதிகளில் உள்ளன. ஆனால் அவரது நினைவிடம் இங்குதான் உள்ளது என்பதற்கு எந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புலவர்கள் யாரும் உறுதியாக சொல்லவில்லை.
ஆனாலும் அவருக்கு இங்கு மணி மண்டபம் கட்டுவதற்கு அரசு பரிசீலனை செய்து வருகிறது. அவரை இங்கு தான் அடக்கம் செய்துள்ளார்கள் என உறுதியாக தெரிந்தால், பொதுமக்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படுவதுடன், இந்த இடத்தை பெரிய சோலை வனமாக்கி, பிரமாண்டமாக்கப்படும். இதற்காக நானும் பல ஆண்டுகளாக முயற்சியை மேற்கொண்டு வருகின்றேன்.
கடந்த சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், இங்கு மணி மண்டபம் கட்டுவதற்கு வாக்குறுதி அளித்திருந்தார். அதற்கான வாய்ப்பு ஏற்பட்டால், உடனடியாக கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து, திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, இந்து அமைப்புகளைச் சேர்ந்த குருமூர்த்தி, ராம.நிரஞ்சன உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.