குன்னூர்: சென்னையில் நடைபெற உள்ள மலர்கண்காட்சிக்கு குன்னூர் காட்டேரி பூங்காவில் 15 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்றுக்கள் தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பாக ஆண்டுதோறும் கலைஞர் நூற்றாண்டு மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த மலர்க் கண்காட்சிக்கு உதகை, கொடைக்கானல், ஓசூர் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான மலர் நாற்றுக்கள் தொட்டிகளில் தயார் செய்யப்பட்டு இங்கிருந்து லாரி மூலமாக சென்னைக்கு எடுத்துச் சென்று காட்சிப் படுத்துவது வழக்கம்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இருந்து இந்த ஆண்டும் சென்னை மலர் கண்காட்சிக்கு லட்சக்கணக்கான மலர் தொட்டிகள் கொண்டு செல்லப்பட உள்ளது. தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக காட்டேரி பூங்காவில், 15000 தொட்டிகளில் சால்வியா டெல்பினியம் உட்பட பல்வேறு வகைகளில் 45 ஆயிரம் மலர் நாற்றுக்கள் தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதேபோன்று சிம்ஸ் பூங்கா, உதகை ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, தோட்டக் கலை பண்ணை உட்பட பல்வேறு இடங்களிலும் லட்சக்கணக்கான மலர் நாற்றுக்கள் தொட்டிகளில் தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற உள்ள மலர்க் கண்காட்சிக்கான தேதிகளை அரசு அறிவித்த பின்பு இங்கிருந்து இந்த மலர் தொட்டிகள் கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.