சென்னை: கனரக வாகனங்கள் நிறுத்துமிடங்களில் தீவிர கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறைக்கு ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் கூட்டமைப்பின் கவுரவ தலைவர் ப.மா.முத்துக்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழகம் முழுவதும் ஆயிரக் கணக்கான கனரக வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. அங்கு தேங்கும் மழைநீரால் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் கனரக வாகன ஓட்டுநர்கள் காய்ச்சல், டெங்கு போன்ற நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக அவர்கள் எடுத்துச் செல்லும் சரக்குகளும் உரிய நேரத்தில் எடுத்துச் செல்ல முடியாத சூழல் உருவாகிறது.
கூட்டமைப்பு சார்பில் மழைக் காலங்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார நெறிமுறைகள் குறித்து ஓட்டுநர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இருந்த போதிலும், கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் கொசு ஒழிப்புப் பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.