தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் பாதசாரிகள் சிரமமின்றி சாலையைக் கடக்கும்வகையில் மேம்பால இரும்பு நடை பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தேனி அருகே கம்பம் சாலையில் பழனிசெட்டிபட்டி உள்ளது. கேரளாவுக்கான பிரதான சாலை என்பதால் இங்கு வாகன நெரிசல் அதிகம் இருக்கும். மேலும் இச்சாலையோரம் பழனியப்பா நினைவு நடுநிலைப்பள்ளியும் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இச்சாலையை கடப்பதில் சிரமம் இருந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து இப்பாதையின் குறுக்கே மேம்பால நடைபாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் இப்பகுதியில் இதற்கான பணி நேற்று (நவ.9) தொடங்கியது. சாலையின் இரண்டு பக்கமும் கான்கிரீட் பில்லர்கள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட இரும்பு நடைபாதையை ராட்சத கிரேன் மூலம் பொருத்தும் பணி இன்று (நவ.10) மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக கம்பம் சாலை வழியே செல்லும் வாகனங்கள் பெரியகுளம் புறவழிச்சாலை, பூதிப்புரம் சாலை வழியே மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், சுமார் 100மீட்டர் நீளத்தில் இந்த மேம்பால இரும்பு நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. ராட்சத கிரேன் மூலம் இரும்பு நடைபாதையை இரண்டு பக்க தூண்களிலும் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றனர்.