சென்னை: தமிழகத்தில் வீட்டிலேயே போதைப்பொருள் தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தேமுதிகவின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் நம்மை விட்டுப் பிரிந்து வரும் 28.12.2024 நாள் அன்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. அன்று முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி தேமுதிக கழகத்தினருடனும் பொதுமக்களும் கலந்து கொண்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து நினைவு நாளை வருடம் தோறும் அஞ்சலி செலுத்துவோம்.
தமிழ்நாடு போதை மாநிலமாக மாறுவதை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்டங்கள் கொண்டுவரவேண்டும், மதுக்கடைகளை நிரந்தமாக மூடி, பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு முழுமையாக போதை மாநிலமாக மாறிவருகின்ற நிலைமையை தேமுதிக அச்சத்துடன் பார்க்கிறது. கஞ்சா, மது, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருட்களால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கப்படுவதுடன், மெத்தபெட்டமைன் போதைப் பொருளை வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய நிலைமை தமிழ்நாட்டில் முதல் முறையாக அரங்கேறியிருப்பது அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலை, கொள்ளை சம்பவமும், சைபர் கிரைம் அதிகமாக பெருகுவதையும், பாலியல் வன்கொடுமையையும் தடுக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டத்தால் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் டிசம்பர் மாதம் சென்னையிலும், மற்ற மாவட்டங்களிலும் கடுமையான மழை ஏற்படப்போகிறது என்று வானிலை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்நிலையில், ஏற்கனவே இயற்கை பேரிடர் காரணமாக தமிழநாடு முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி, விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதுடன், போக்குவரத்து இடைஞ்சல் ஏற்பட்டு, பொதுமக்களுக்கு அசாதாரணமான சூழநிலையை ஏற்படுத்துகிறது. இதை போர்க்கால அடிப்படையில் திட்டங்களை தீட்டி, சாலைகள் மற்றும் போக்குவரத்தை தமிழக அரசு திறம்பட செயல்படுத்த வேண்டும்.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி ஏற்றிய சொத்து வரியை உடனே திரும்ப பெற வேண்டும்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடுகள் செய்வதை கைவிட்டு விட்டு, தமிழக விவசாயிகளும், கர்நாடகா விவசாயிகளும் பயன்பெறுகின்ற வகையில் ராசிமணல் என்ற இடத்தில் அணை கட்டினால் இரண்டு மாநிலமும் நீர் வசதி பெறுகின்ற வகையில் தீர்வுகாண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.