2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை பரிசளிக்க தயார்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்


கோப்புப்படம்

மதுரை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிக்கத் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த காலங்களில் அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்துக்கு எல்லாம் தேடி வந்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்று தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகியும், இதுவரை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 24 மாத அகவிலைப்படி, ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆகியவற்றை முடக்கி, அரசு ஊழியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்ததுதான் சாதனையாக உள்ளது.

தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்த பள்ளிக்கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில், நிதி சாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம், அரசு ஊழியர்களுக்கு அவர் துரோகம் இழைத்துள்ளார்.

உண்மையிலேயே நிதிநிலை மோசமாக உள்ளது என்றால், நிதிநிலை சரியாகும் வரை எங்களுக்கு ஊதியம் வேண்டாம் என்று முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அறிவிப்பார்களா?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த சிபிஎஸ் சந்தா தொகை தமிழக அரசால் தவறுதலாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்குப் பரிசளிக்கத் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x