மதுரை: ‘‘கடந்த 10 மாதத்தில் பணி சுமை, ஒய்வு இல்லாத காரணத்தால் 254 காவல்துறையினர் மரணமடைந்துள்ளனர்’’ என்று சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் செல்லம்பட்டியில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செல்லம்பட்டி ராஜா தலைமை வகித்தார். சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட பொறுப்பாளர் தண்டரை மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், நீதிபதி, தவசி, தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர் பி உதயகுமார் பேசுகையில், “திமுக தந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டு வருகிறது, அதில் நீட் தேர்வு ரகசியம் என்பது முதன்மையான விவாத பொருளாக இருப்பதை முதல்வர் நன்றாக அறிவார். விருதுநகர் வரும் முதலமைச்சர் நீட் தேர்வு ரகசியத்தை வெளியிடுவாரா? என மக்கள், மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களை ஏமாற்றி வாக்குகளை பறிக்கின்ற பொய்யான வாக்குறுதிகளை தெரிவித்துள்ளார்கள்.
சாத்தியமான திட்டங்களை அறிவித்தால் தான், திட்டங்களை நிறைவேற்ற முடியும். இந்தியாவில் மிகப்பெரிய காவல்துறையாக தமிழக காவல்துறை திகழ்கிறது. இங்கிலாந்து ஸ்காட்லாந்து நிகரான காவல்துறையாக போற்றப்படுகிறது. தேசிய அளவில் தமிழக காவல்துறை ஐந்தாவது இடத்தில் உள்ளது. டிஜிபி தலைமையில் இயங்கும் காவல்துறை, ஒரு லட்சம் 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள மக்களை கொண்ட தமிழகத்தின் சட்ட ஒழுங்கு, குற்றதடுப்பு பணியை மேற்கொள்கிறது.
தமிழகத்தில் 30 காவல் மாவட்டங்கள் உள்ளன. 1,21,718 காவலர்கள் பணிபுரிகிறார்கள். தற்போது தரும் அதிர்ச்சி தகவலாக கடந்து சில ஆண்டுகளாக பணிசுமை, போதுமான ஓய்வு இல்லாத காரணத்தினால் 1347 காவலர்கள் உயிரிழந்து உள்ளார்கள். அதாவது தமிழகத்திலே அபாயம் நிறைந்த துறையாக காவல்துறை பார்க்கப்படும் சூழ்நிலை உள்ளது. எந்த அரசுத்துறையில் இல்லாத வகையில் தற்கொலை அதிகம் நடக்கும் துறையாகவும் காவல்துறை பார்க்கப்பட்டு வருகிறது’’ என்றார்.