மதுரையில் ஓட்டை, உடைசல்களுடன் இயங்கும் அரசுப் பேருந்துகள் - பயணிகள் அச்சம்


மதுரையில் இயங்கும்பழுதுகளுடன் இயங்கும் அரசு தாழ்தளப் பேருந்து, பிடிமானமின்றி உள்ள படிக்கட்டு இரும்புக்கம்பி.

மதுரை: மதுரை மாநகருக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் சில ஓட்டை, உடைசல்கள் உள்ளிட்ட பழுதுகளுடன் இயங்குவதால் அவைகளில் பயணிகள் அச்சத்தோடு பயணிக்கின்றனர்.

மதுரை மாநகரில் அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில், குறிப்பாக பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பேருந்துகள் ஓட்டை உடைசல்களுடன் உள்ளன. பேருந்து மேற்கூரைகளும் பழுதாகி மழைக்கு ஒழுகும் நிலையே இருக்கிறது. மேலும் சில பேருந்துகளில் இருக்கைகள் உடைந்தும், படிக்கட்டுகளில் இரும்பு கம்பிகள் பிடிமானமின்றியும் உள்ளன. அந்தக் கம்பியை நம்பி பிடித்து இறங்கினாலோ, ஏறினாலோ பயணிகள் கீழே தவறி விழும் நிலை உள்ளது. இதுபோன்று அச்சத்துடனேயே பயணிக்கும் நிலையில் பயணிகள் உள்ளனர்.

இதுகுறித்து திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பூபதி என்பவர் கூறுகையில், "பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திற்கு அரசுப்பேருந்தில் (டிஎன் 58-என்-1480) ஏறினேன். படிக்கட்டு அருகிலுள்ள இரும்புக்கம்பியை பிடித்து ஏறும்போது கம்பி பிடிமானமின்றி ஆடியதால் கீழே தவறி விழுந்தேன். பின்னால் வந்த பயணியை என் கையைப் பிடித்து தூக்கி விட்டார்.

பல பேருந்து நிறுத்தங்களில் இறங்கும் பயணிகளும் ஆடிய கம்பியை பிடித்து இறங்கும்போது கீழே விழும்நிலைக்கு தள்ளப்பட்டனர். பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் இதுபோன்று பராமரிப்பின்றி இயங்கும் பேருந்துகளை சீரமைத்து இயக்க வேண்டும். மழை பெய்யும்போது பேருந்துக்குள் மழைநீர் ஒழுகும் நிலை உள்ளது.பேருந்துக்குள் குடைபிடிக்கும் நிலை ஏற்படுகிறது.

பேருந்துகளை பழுதில்லாமல் இயக்க அரசுப் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் கேட்ட சமூக ஆர்வலர் ஒருவருக்கு பதிலளித்த அரசு போக்குவரத்து கழக நிர்வாகம், மதுரை மாவட்டத்தில் ஓட்டை, உடைசல் பேருந்துகள் இயக்கப்படவில்லை என பொய்யான தகவல்களையும் கூறி மக்களையும் ஏமாற்றுகின்றனர்" என்றார்.

x