சிறப்புக்கூறு திட்ட நிதியை மடைமாற்றம் செய்கிறார்: புதுச்சேரி முதல்வர் மீது விசிக குற்றச்சாட்டு


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்

புதுச்சேரி: புதுச்சேரியில் குடிபெயர்ந்த பட்டியலின மக்களை பிளவுப்படுத்தி, சிறப்புக்கூறு திட்ட நிதியை மாற்றுத்திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்து முதல்வர் பாழ்படுத்துவதாக அம்மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி புதுச்சேரியில் தாய்வழியில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். பட்டியலின, பழங்குடியின மக்களை தவிர்த்து ஓபிசி, எம்பிசி பிரிவினருக்கு 2001-ம் ஆண்டினை காலவரையறையாக வைத்து சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அதேபோல் புதுச்சேரி அரசு குடிபெயர்ந்த எஸ்சி, எஸ்டி பிரிவு மக்களுக்கான சமூகநீதியை உறுதிப்படுத்தும் விதமாக 2001-ம் ஆண்டைக் கணக்கில் கொண்டு அவர்களுக்கும் சாதி சான்றிதழ், அனைத்து விதமான உரிமைகளையும் வழங்க வேண்டும். புதுச்சேரியில் குடிபெயர்ந்த பட்டியலின மக்களை பிளவுபடுத்தி, சிறுப்புக்கூறு திட்ட நிதியை மாற்றுத்திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்து முதல்வர் பாழ்படுத்துகிறார். சிறப்புக்கூறு திட்ட நிதி எந்த நோக்கத்துக்காக ஒதுக்கப்படுகிறதோ அந்த நோக்கத்துக்கு முழுமையாக செலவிடப்பட வேண்டும்.

பட்டியலின, பழங்குடியின மக்களுக்காக சிறுப்புக்கூறு நிதியை சாலை,மின்சாரம், குடிநீர், சமுதாய நலக்கூடம் உள்ளிட்டவற்றுக்கு பாட்கோ மூலம் செலவு செய்யப்படுகிறது. இந்த நிதி பட்டியலின மக்களுக்கு பரவலாக செலவுசெய்யப்படவில்லை. எனவே, உள்ளாட்சித்துறைக்கும் சிறப்புக்கூறு நிதியை ஒதுக்கி, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் மூலம் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கட்டமைப்பு வசதியை செய்து தர வேண்டும்.

எங்களின் இத்தகைய கோரிக்கைகளை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தொகுதி தோறும் பொதுக்கூட்டம் நடத்தி புதுச்சேரி அரசு பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படுவது குறித்து பரப்புரை செய்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு அவர் கூறினார்.

x