“கல்வியில் தமிழகம் முதலிடம் வகிக்க முதல்வர் தொடர்ந்து உழைக்கிறார்” - அமைச்சர் செந்தில் பாலாஜி


அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்: கல்வியில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் என்ற நிலையை உருவாக்க முதல்வர் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார் என மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

திமுக மாணவர் அணி, மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் கரூர் தனியார் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு மாநில மாணவரணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் தலைமை வகித்தார். மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: "மாணவர் அணியினர் அரசு திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சென்று சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மாணவரணி அடுத்த தலைமுறையை உருவாக்கக்கூடிய முக்கிய இடத்தில் உள்ளது.

மாணவர்களுக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. காலை உணவு, நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களை வழங்கி வருகிறது. எந்த துறைக்கும் இல்லாத அளவில் ரூ.44,000 கோடி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்க்கல்வித் துறைக்கு ரூ.8,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வியில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெறவேண்டும் என முதல்வர் உழைத்துக் கொண்டுள்ளார்.

மாணவரணியில் மாவட்ட அளவில் 6 பேர் உள்ளிட்ட 222 நிர்வாகிகள் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் 1,055 வாக்குச் சாவடிகள் உள்ள நிலையில், வாக்குச்சாவடியில் பணியாற்ற 20 சதவீத மாணவரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்புக் கிடைக்கும். தேர்தல் நேரத்தில் அவர்கள் சிறப்பாக பணியாற்றவேண்டும். மாணவரணியில் கரூர் மாவட்ட மாணவரணி முதலாவதாக இருக்கும் என உறுதி கூறுகிறேன். இளைஞரணியுடன் இணைந்து மாணவரணி நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்று மாணவர்களின் குரலாக ஒலிக்கின்றனர். மாணவரணி, இளைஞரணி, மகளிர் அணியினர் போட்டி போட்டுக்கொண்டு உறுப்பினர்களை சேர்க்கவேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

இன்றைய கூட்டத்தில், திமுக மாநில மாணவர் அணி தலைவர் ரா.ராஜீவ்காந்தி, இணைச்செயலாளர்கள் சி.ஜெரால்டு, எஸ்.மோகன், துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூரணசங்கீதா சின்னமுத்து, ஜெ.வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

துணை முதல்வரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம், தமிழ் மாணவர் மன்ற அமைப்பினை ஏற்படுத்தி அதில் உறுப்பினராக சேர்த்த படிவங்களை ஒப்படைத்தல் ஆகிய அம்சங்கங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

x