புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் நவ. 15 வரை கனமழை வாய்ப்பு    


புகைப்படம்: வேளாங்கண்ணி ராஜ்

சென்னை: வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதே பகுதியில் நிலவுகிறது. அதன் தாக்கத்தால் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழகம்–இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். தெற்கு அரபிக் கடலின் மத்தியப் பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், 11, 12-ம் தேதிகளில் சில இடங்களிலும், 13, 14, 15-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 10-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், வரும் 11-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 12-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், 13-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 14-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 15-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் (நீலகிரி, கோவை, திருப்பூர் நீங்கலாக) மற்றும் வேலூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடை, தக்கலை, கோழிப்போர்விளை, மயிலாடுதுறை மாவட்டம் கோடியக்கரையில் 9 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு, பாலமோர், இரணியல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 6 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம், முள்ளங்கினாவிளை, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் ஆயிங்குடியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், 11, 12-ம் தேதிகளில் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளிலும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x