தென்காசி: பண பிரச்சினையில் அரிசி ஆலை உரிமையாளர் கடத்தப்பட்டுள்ளார். இதையடுத்து 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள கோவிலூத்து பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருபவர் உதயகுமார். இவர், கடந்த ஆண்டு கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த சூரியகுமார் என்பவரிடம் நெல் கொள்முதல் செய்துள்ளார். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் கொடுத்துவிட்டு, மீதி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், இன்று உதயகுமாரின் அரிசி ஆலைக்கு காரில் வந்த சூரியகுமார், சுரேஷ், ஹரி கிருஷ்ணன், பிரதீபன் உள்ளிட்ட 6 பேர், உதயகுமாரிடம் பணத்தைக் கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது அவர்கள், உதயகுமாரின் காருடன் அவரை கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து உதயகுமாரின் தந்தை கடையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, கடத்தலில் தொடர்புடையவர்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டார்.
இதையடுத்து தனிப்படை போலீஸார் விரைந்து செயல்பட்டு, பண்ருட்டியைச் சேர்ந்த சூரியகுமார் (31), சுரேஷ் (39), கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், விராலிமலையைச் சேர்ந்த பிரதீபன் ஆகியோரை கைது செய்து, அவர்களின் பிடியில் இருந்து உதயகுமாரை மீட்டனர். இந்தக் கடத்தலில் தொடர்புடைய மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். விரைந்து செயல்பட்டு, கடத்தப்பட்ட உதயகுமாரை மீட்ட தனிப்படை போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.