சென்னை: தமிழகத்தில் 2026-ல் திமுக அல்லாத கூட்டணி ஆட்சி தான் அமையும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூரில் இன்று நடைபெற்ற தனியார் அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: “பிரதமர் நரேந்திர மோடி 70 வயது மேற்பட்ட முதியோர்களுக்காக ரூ.5 லட்சம் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். இத்திட்டத்தை தென் சென்னை முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். விரைவில் தமிழகம் முழுவதும் இதை எடுத்து செல்வோம்.
எந்தவித வருமான உச்ச வரம்பும் இல்லாமல், இத்திட்டத்தின் மூலம் உயர் ரக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தமிழகத்தில் இந்த திட்டம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.
மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என தமிழக அதிகாரிகள் சொல்வது சரியல்ல. திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது என்று அவர்கள் சொன்னாலும், அது முதிர்ந்து தான் இருக்கிறது. திமுக கூட்டணியில் பிரச்சினைகளை உருவாக்க சிலர் முயற்சிக்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்.
திமுக கூட்டணியில் யாரும் பிரச்சினைகளை உருவாக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என திமுக கூட்டணிக்குள் அவர்களே பிரச்சினைகளை உருவாக்கி கொள்கிறார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே, பாஜக கூட்டணியை பலம் பொருந்திய கூட்டணியாக மாற்றி, 2026-ல் திமுக அல்லாத கூட்டணி ஆட்சி தான் இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
திமுக கூட்டணியில் இருந்து பலர் வெளியே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இல்லை. அகில இந்திய அளவிலும் இண்டியா கூட்டணி உறுதியாக இல்லை. திமுக கூட்டணி கட்சிகளுக்கு, 2026 தேர்தலுக்கு பிறகு ஆட்சியில் பங்கு கிடைக்காது. ஏனென்றால் திமுக கூட்டணி 2026-ல் ஆட்சிக்கு வரப்போவது கிடையாது. அதனால், மீதமுள்ள நாட்களிலாவது ஆட்சியில் பங்கு எடுத்துக் கொள்ளுங்கள் என திருமாவளவன் போன்றோர்க்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.