கும்பகோணத்தில் பாமக உண்ணாவிரதப் போராட்டம்: தடை செய்யக் கோரி விசிக மனு


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்

கும்பகோணம்: கும்பகோணத்தில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள பாமக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கும்பகோணம் டிஎஸ்பி-யான கீர்த்திவாசனிடம் இன்று மனு அளித்தனர்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் கா.செ. முல்லைவளவன் மற்றும் கட்சியினர் அளித்துள்ள மனுவில், ‘கடலூர் மாவட்டம், புவனகிரி அருகில் உள்ள மஞ்சக்கொல்லையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பத்தைச் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக பல இடங்களில் பாமகவினர் விசிகவினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசி அப்பாவி வன்னிய மக்களைத் தூண்டிவிடுகின்றனர்.

இந்த நிலையில், இரு சமூகங்களுக்கான நல்லிணக்கத்தை கெடுக்கும் விதத்திலும் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்திலும், வரும் 11-ம் தேதி பாமகவினர் கும்பகோணம் காந்தி பூங்காவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்தால் அமைதியாக உள்ள தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர், ஆடுதுறை ஆகிய பகுதிகளில் 2 சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நடந்த பிரச்சினை போல், பாமகவினர் தஞ்சாவூர் மாவட்டத்திற்குள்ளும் நடத்தத் திட்டமிடுவதாக தெரிகிறது. எனவே, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமலிருக்க, கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் வரும் 11-ம் தேதி பாமக நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை தடை செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

x