குன்னூர்: குன்னூரில் பெய்து வரும் கனமழையின் காரணமாக குன்னூர் மலைப்பாதையில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சியால் சுற்றுலா பயணிகள் குதூகலமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது குன்னூர் மலைப்பாதை அனைத்தும் பசுமையாக காட்சியளிக்கிறது. மேலும், பல்வேறு இடங்களில் புதிதாக அருவிகள் உருவாகியுள்ளது.
அதேசமயம், ஏற்கெனவே இங்குள்ள நீர்வீழ்ச்சியான லாஸ் பால்ஸ், மரப்பாலம், டால்பின் நோஸ் அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி, மலை ரயில் பாதை பகுதிகளிலும் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சிகளின் முன்பு நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.
இதில், வனத்துறையினரின் தடையை மீறி சில சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிகளுக்குள் அத்துமீறி செல்கின்றனர். இதனால் தற்போது பாதுகாப்பு வளையங்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வனத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.