சென்னை: திரைத்துறையில் ‘டப்பிங்’ சங்கப் பிரச்சினை தொடர்பாக, நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சி.வி.கணேசனை நடிகர் எஸ்.வி.சேகர் சந்தித்து மனு அளித்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அமைச்சரை சந்தித்து, டப்பிங் சங்கம் தொடர்பாக கோரிக்கை விடுத்தோம்.
நடிகர் ராதாரவி தலைமையில் இயங்கும் சங்கத்தில் அவ்வப்போது விதிகளை மாற்றி வருகின்றனர். இதனால், வேறு சங்கத்தில் இருப்பவர்கள் இந்த சங்கத்தில் இயங்க முடியாத நிலை உள்ளது. இதுதொடர்பாக அமைச்சரிடம் முறையிட்ட போது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
கடந்த 70 ஆண்டுகளாக எந்த வித சலுகையும் அனுபவிக்காமல் நலிந்த பிராமணர்கள் இங்கு உள்ளனர். ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் அந்தணர் நலவாரியம் என்று உள்ளது. அந்த வாரியத்துக்கு ரூ.100 கோடி வரை ஒதுக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டுவசதி செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் பிராமணர் பிரதிநிதி யாரும் இல்லை. அந்தணர் முன்னேற்ற வாரியம் அமைத்தால் 10 லட்சம் பேர் பயனடைவார்கள்.
நடிகை கஸ்துாரி பேசியது மிகப்பெரிய தவறு. கோரிக்கை வைப்பவர்கள் தனக்கு என்ன வேண்டும் என்றுதான் கேட்க வேண்டுமே தவிர, அடுத்தவர்களை கைகாட்டி பல விஷயங்களை பேசக் கூடாது. ஒரு சமுதாய கூட்டத்தில் அரசியல் பேசுவது நல்லதல்ல. பாஜகவில் பட்டபாடு போதும் 10 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து நான் பட்டபாடுபோதும். தேவையில்லாத சாயத்தை முகத்தில் பூசிக்கொண்டிருக்க வேண்டாம் என்பதால் அக்கட்சியில் இருந்து விலகிவிட்டேன்.
எனக்கு ஒரு கட்சி அடையாளம் தேவையில்லை. கட்சிக்குதான் நான் தேவை. மிஸ்டுகால் கொடுத்து உறுப்பினர் சேர்த்தால் 50 ஆண்டு ஆனாலும் இங்கு ஆட்சிக்கு வரமுடியாது. தமிழக அரசியல் மட்டுமல்லாது. தரம் உள்ள எந்த இடத்திலும் அண்ணாமலை இருக்க முடியாது. பிராமணர்களுக்கு நல்லது செய்யும்பட்சத்தில், வரும் தேர்தலில் திமுகவுக்கு பிரச்சாரம் செய்வேன். இதில் எந்த தப்பும் இல்லை.
அந்தணர் நலவாரியம், சட்டப் பேரவையில் பிராமணர்களுக்கு இடம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பிராமணர்கள் மட்டுமல்ல, யாருமே தமிழக பாஜகவை நம்புவது வீண். பாஜக அரசு சராசரி மக்களுக்கானதை செய்ய வேண்டும்.
தமிழக அரசியல் என்பது திமுக, அதிமுக இடையில்தான் நடக்கிறது. தமிழகத்தில் தாமரை மலரவே மலராது. விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா என்பது கேள்வி. அதை ஓட்டாக மாற்றும் திறன் விஜய்க்கு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.