சென்னை: ‘அமரன்’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, சென்னையில் ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம், தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியானது. இந்திய ராணுவத்தில் பணியாற்றி தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், காஷ்மீர் முஸ்லிம்களை அவதூறு செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக சில முஸ்லிம் அமைப்புகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில், இந்த அமைப்புகள் நேற்று (வெள்ளி) நண்பகலுக்கு பின்னர், சென்னையில் ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
10 போலீஸார்: இதன் அடிப்படையில் திருவல்லிக்கேணி, அண்ணாநகர், கோயம்பேடு, தியாகராயநகர், பரங்கிமலை, கீழ்ப்பாக்கம் உட்பட சென்னையில் ‘அமரன்’ திரைப்படம் ஓடும் அனைத்து திரையரங்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொரு திரையரங்குக்கும் 10 போலீஸார் வரை பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டனர்.
ரசிகர்களிடம் சோதனை: சில திரையரங்குகளில் படம் பார்க்க வந்த ரசிகர்கள், போலீஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்பட்டனர். அதேபோல சில இடங்களில் திரையரங்கு இருக்கும் பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். சுமார் 46 தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நிலைமை சீராகும் வரையில் நீடிக்கும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.