கூட்டணியை சிதறடிக்க விசிகவை கருவியாக்க முயற்சி: திமுக கூட்டணியில் தொடர்வதாக திருமாவளவன் மீண்டும் திட்டவட்டம்


திருமாவளவன் | கோப்புப்படம்

மாற்று கருத்துடைய தலைவர் விழாவில் பங்கேற்பதால் அணி மாறி விடுவோம் என்பது என்ன மாதிரியான உளவியல்? மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை சிதறடிக்க விசிகவை கருவியாக்க சிலர் முயற்சிக்கின்றனர் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியல் அடிப்படையில் நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம். இதற்கு ஆளுங்கட்சி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாம் இடம் பெற்றிருப்பதே முதன்மையான காரணம். இக்கூட்டணி, தேர்தல்களில் மகத்தான வெற்றிகளைக் குவித்து வருவதைக் கொள்கைப் பகைவர்களாலும் அரசியல் போட்டியாளர்களாலும் எவ்வாறு சகித்துக்கொள்ள இயலும்? எனவே, கூட்டணியைச் சிதறடிக்கத் திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர்.

தவெக தலைவர் விஜய், தனது மாநாட்டில் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கத் தயார் என அறிவித்தார். அவர் எத்தகைய எதிர்பார்ப்புடன் இதனை அறிவித்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ‘ஆட்சியதிகாரத்தில் பங்கு’ என்பது விசிகவின் கோரிக்கை என்பதால் நம்மை குறிவைத்து தான் விஜய் பேசியுள்ளார் என அரசியல் தளத்தில் உரையாடல்கள் நடந்தன. அது தவிர்க்க இயலாத ஒன்றேயாகும்.

மேலும், வார இதழ் மற்றும் ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ என்னும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ தொகுப்பில் என்னுடைய நேர்காணல் உட்பட அம்பேத்கர் உறவினர் ஆனந்த் டெல்டும்டே, விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், இந்து என்.ராம் என 36 பேர் கட்டுரை எழுதியுள்ளனர். தவெக தலைவர் விஜய் மாநாடு நடைபெறுவதற்கு முன், கடந்த ஏப்ரலில் அம்பேத்கர் பிறந்தநாளன்று தொகுப்பு வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் விழாவில் நானும் பங்கேற்பதாக ஏற்கெனவே கூறியிருந்தேன்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் டிச.6-ம் தேதி அம்பேத்கர் நினைவு நாளில் தொகுப்பு வெளியீட்டை ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்திய நிலையில், தவெக தலைவர் விஜய்யும் பங்கேற்பார் என கூறினர்.

மாற்றுக் கருத்து அல்லது முரண்பாடான நிலைப்பாடு கொண்ட இன்னொரு கட்சியின் தலைவரோடு விழாவில் பங்கேற்பதாலேயே நாம் அணி மாறிவிடுவோம் என்பது என்ன வகையான உளவியல்? கூட்டணி கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம். உறுதியாகத் தொடர்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

x