தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்


சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் முதல்முறையாக பெண் அதிகாரி, தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலராக இருந்த அர்ச்சனா பட்நாயக், தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இந்திய தலைமை தேர்தல் ஆணையச் செயலர் ராகுல் சர்மா நேற்று இரவு பிறப்பித்தார்.

முதல்முறையாக பெண் அதிகாரி: ஏற்கெனவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரத சாஹுவுக்கு அண்மையில் கூடுதலாக கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறைகள் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டன. இனி அவர் இந்த துறைகளின் செயலராகப் பணியாற்றுவார். தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக பெண் ஐஏஎஸ்அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

x