முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் மாரடைப்பால் காலமானார்


முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் (கோப்புப் படம்)

கோவையைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.செல்வராஜ் மாரடைப்பால் காலமானார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவை செல்வராஜ் (எ) கே.செல்வராஜ் (66). முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவான இவர் திமுகவில் செய்தி தொடர்பு துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவரதுக்கு மனைவி கலாமணி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், மூன்றாவது மகன் வெங்கட்ராம் திருமணம் திருப்பதியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. திருமண நிகழ்வுகளை முடித்துவிட்டு இரு வீட்டாரும் நேற்று கார் மூலம் கோவைக்குப் புறப்பட்டனர். திருப்பதி மலையில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தபோது திடீரென செல்வராஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் காலமானார்.

அவரது உடல் கோவைக்கு எடுத்து வரப்பட்டு, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அவரது இறுதிச் சடங்கு இன்று (நவம்பர் 9) நடைபெற உள்ளது.

கடந்த 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், காங்கிரஸ் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவாளராக மாறி, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏவாகச் செயல்பட்டார்.

2006-ல் காங்கிரஸ் சேவாதள அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். திமுக-காங்கிரஸ் கூட்டணி இருந்த நிலையில், கூட்டணி கட்சியை விமர்சித்த நிலையில் 2015-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அதிமுகவில் சேர்ந்தார். ஆனால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காத நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக மாறினார். பின்னர் அதிமுகவை விமர்சித்துவிட்டு, அக்கட்சியில் இருந்து விலகினார். 2022-ல் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

x