முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கடந்த ஆக. 25-ம் தேதி கரூர் ஆட்சியரிடம் அளித்த புகாரில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சீமான் அவதூறாகப் பேசியதாகத் தெரிவித்திருந்தார். மேலும், எஸ்.பி. அலுவலகம், தாந்தோணிமலை காவல் நிலையத்துக்கும் புகார் மனுக்களை அனுப்பினார். ஆனால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால், கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு தாந்தோணிமலை போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, அவதூறாகப் பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கில் பேசி இணையதளத்தில் வெளியிடுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது தாந்தோணிமலை போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது