ஆவின் நிறுவனத்திலிருந்து திருப்பதிக்கு நெய் அனுப்புவது குறித்து பரிசீலனை: பால்வளத் துறை அமைச்சர் தகவல்


ஈரோடு ஆவின் தீவன தொழிற்சாலையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.

ஈரோடு: ஆவின் நிறுவனத்திலிருந்து திருப்பதிக்கு நெய் அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

ஈரோடு ஆவின் மற்றும் நவீனகால்நடை தீவனத் தொழிற்சாலையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தினமும் 1.74 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 74 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு கொள்முதல் செய்யப்படும் பால்முழுவதையும் இந்த மாவட்டத்திலேயே விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ளேன். தனியார் பாலைக் காட்டிலும் லிட்டருக்கு ரூ.12 விலை குறைத்து ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. எனினும், தமிழகத்தில் ஆவின் பால் விலையை உயர்த்தும் திட்டம் எதுவுமில்லை.

கள்ளச் சந்தையில் ஆவின் பால் விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும். தமிழகத்தில் பால் கொள்முதலை 54 லட்சம் லிட்டராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரோடு ஆவின் நிறுவனத்திலிருந்து திருப்பதிக்கு நெய் அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும். ஆவின் கடைகளில் ஆவின் சார்ந்த பொருட்கள் தவிர மற்ற பொருட்களை விற்பனை செய்தால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.ஈரோடு ஆவின் தீவன தொழிற்சாலையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.

x