புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முதல் இந்தியாவுக்கு புதின் ‘ஆதரவு’ குரல் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேற்கு திசையில் தமிழக - இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது

இதன் காரணகாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இம்மாதம் 14-ம் தேதி வரை கனமழை வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை சிதறடிக்க சதி’: “மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சிதறடிக்க விசிகவை கருவியாகப் பயன்படுத்த சதி செய்யப்படுகிறது” என விசிக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள்”: “கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை கடலின் நடுவே கலைஞர் பேனா சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்க முனைப்பு காட்டப்படுகிறது. மேலும், சென்னை முட்டுக்காட்டில் ஐந்து லட்சம் சதுர அடியில், 487 கோடி ரூபாய் செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு இந்த திராவிட மாடல் அரசு டெண்டர் கோரியுள்ளது. பல ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் நதிநீர் இணைப்புக்காக பல போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், திராவிட மாடல் அரசு அதில் கவனம் செலுத்தாமல் பன்னாட்டு அரங்கம் கட்டுவதற்கு முனைப்பு காட்டுவதற்கான காரணம் என்ன?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

சென்னையில் இந்து மக்கள் கட்சியினர் கைது: கனடாவில் இந்துக்கள் மற்றும் இந்து கோயில்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, சென்னை அண்ணா சாலையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

“நீர், வனம், நிலத்தைப் பறிக்க பாஜக முயற்சி” - ராகுல் சாடல்: நாடு 2, 3 நபர்களால் நடத்தப்பட வேண்டும் என்று பாஜக விரும்புகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மேலும், பழங்குடியின மக்களிடம் இருந்து நீர், காடு, நிலம் ஆகியவற்றைப் பறிக்க பாஜக முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

“எம்விஏ கூட்டணி சக்கரமும் பிரேக்கும் இல்லாத வாகனம்”: சக்கரமும் பிரேக்கும் இல்லாத வாகனத்தைப் போன்றது மகா விகாஸ் அகாதி கூட்டணி என விமர்சித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாகனத்தின் இருக்கையில் அமரக்கூட அவர்களுக்குள் சண்டை நடப்பதாகக் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீர் பேரவையில் 3-வது நாளாக அமளி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர வலியுறுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் வெள்ளிக்கிழமையும் அமளியில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

ஆம்ஸ்டர்டமில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்: ஆம்ஸ்டர்டமில் இஸ்ரேலியர்களைக் குறிவைத்து தாக்குதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு இரண்டு மீட்பு விமானங்களை அனுப்பி வைக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பூண்டு விலை உயர்வு: தமிழகத்தில் பூண்டு விலை உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் வெள்ளிக்கிழமை பூண்டு கிலோ ரூ.380-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்தியாவை வல்லரசு நாடாக அங்கீகரிக்க புதின் வலியுறுத்தல்: ‘இந்தியாவை வல்லரசு நாடாக அங்கீகரிக்க வேண்டும். உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் அந்த நாட்டை இணைக்க வேண்டும். இதற்கான அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உள்ளது’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தற்போது இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 150 கோடியாக உள்ளது. உலகில் அதிவேகமாக வளர்ச்சி அடையும் நாடாக விளங்குகிறது. பழமையான கலாச்சாரம், வளமான எதிர்காலம் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. இந்தியாவுடன் அனைத்து துறைகளிலும் ரஷ்யா இணைந்து பணியாற்றி வருகிறது. குறிப்பாக பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இந்தியாவின் முப்படைகளிலும் ரஷ்ய ஆயுதங்கள், தளவாடங்கள் பயன்பாட்டில் உள்ளன.

இந்தியாவுக்கு நாங்கள் ஆயுதங்களை விற்பது மட்டுமன்றி, அந்த நாட்டுடன் இணைந்து ஆயுத உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு சிறந்த உதாரணமாக பிரம்மோஸ் ஏவுகணையை குறிப்பிடலாம். இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தரை, வான், கடல் என மூன்று தளங்களில் இருந்தும் ஏவக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து உள்ளன.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மிக நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இந்த உறவு வருங்காலத்திலும் தொடரும். இந்தியாவுக்கும் அதன் அண்டை நாடான சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினைகள் இருப்பது உண்மைதான். இரு நாடுகளை சேர்ந்த புத்திசாலியான தலைவர்கள் உரிய சமரச தீர்வை காண்பார்கள்’ என்று புதின் கூறியுள்ளார்.

x