ரூ.54 கோடி நிதியுதவி ஏனாம் பகுதி மீனவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தகவல்


புதுச்சேரி: ஓஎன்ஜிசி மூலம் வழங்கப்படும் இரண்டாவது தவணை நிதியான ரூ.54 கோடி மற்றும் விடுபட்டவர்களுக்கு ரூ.6 கோடி நிதியுதவியானது ஏனாம் பகுதி மீனவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதி வழியாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமானது (ஓஎன்ஜிசி) பைப் லைன் அமைப்பதால் மீனவர்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடு செய்யும் வகையில் நிதியுதவி வழங்க உள்ளது. இதற்கான அரசாணையை முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ''ஓஎன்ஜிசி நிறுவனமானது ஏனாம் பகுதியில் மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான நிதி உதவிகளை செய்து வருகிறது. எண்ணெய் குழாய் பதிப்பால் பாதிக்கப்பட்ட மீனவ சமுதாய மக்களுக்கு முதலில் ரூ.91 கோடி ஓஎன்ஜிசி மூலம் கொடுக்கப்பட்டது‌. தற்போது இரண்டாவது தவணையாக ரூ. 54 கோடி கொடுக்கப்பட உள்ளது. இதுதவிர, விடுபட்டவர்களுக்கு சுமார் ரூ.6 கோடி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமானது, ஏனாம் வழியாக பைப் லைன் போடும்போது மீன் பிடிக்கின்ற நிலை மாறுகின்றது என்ற எண்ணத்தின் அடிப்படையில் அப்பகுதி மக்களின் வாழ்வுக்காக இந்த நிதியை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் கொடுப்பது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

இதற்காக புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணராவ் எடுத்து வரும் முயற்சி என்பது மிகவும் பாராட்டுக்குரியது. ஏனாம் தொகுதியில் பாதிக்கப்பட்ட மீனவ சமுதாய மக்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் இரவு பகலாக நேரத்தை செலவிட்டு தீவிர முயற்சி செய்து அதற்கான ஆணையை பெறுவது என்பது மிகவும் பாராட்டுக்குரிய ஒன்று.

விரைவிலேயே இந்த ரூ.54 கோடி மற்றும் ரூ.6 கோடி நிதி ஏனாம் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணராவ் அவர்களுக்கும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்திற்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்‌.

அப்போது புதுச்சேரிக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணராவ் உடனிருந்தார்.

x