ராமேசுவரம்: ராமேசுவரத்தில் ஓராண்டுக்கு முன்னர் காணாமல் போன மீனவரின் எலும்புகளை வனப்பகுதியில் சேகரித்த போலீஸார், இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர்.
ராமேசுவரம் அருகே சம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (39). இவரது அண்ணன் குமார், தனது சகோதரன் விஜயகுமாரை காணவில்லை என 26.11.2023ல் ராமேசுவரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, சம்பை பகுதியைச் சேர்ந்த பலரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், விசாரணையில் போதிய தகவல் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சம்பை கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (24) என்பவர் கடந்த தீபாவளி அன்று மது போதையில் சக நண்பர்களிடம் விஜயகுமாரை கொலை செய்ததாக உளறி உள்ளார். இது குறித்து முத்துக்குமாருடன் மது அருந்திய நண்பர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக போலீஸார் முத்துக்குமாரிடம் விசாரணை நடத்தியதில், கடந்தாண்டு முத்துக்குமார், சம்பை பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (22) மற்றும் விஜயகுமார் ஆகிய மூவரும் சம்பை அருகே உள்ள வனப்பகுதியில் மது அருந்தி உள்ளனர். அப்போது விஜயகுமாருக்கும் மற்ற இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், அவரை முத்துக்குமாரும், சஞ்சயும் கட்டி வைத்து அடித்ததில் விஜயகுமார் உயிழந்துள்ளார்.
இதையடுத்து, முதலில் விஜயகுமாரின் உடலை வனப்பகுதியில் உள்ள பள்ளத்தில் போட்டதாகவும், பின்னர் போலீஸார் விசாரணை நடத்தி வருவதை அறிந்ததும் சில நாட்கள் கழித்து பள்ளத்திலிருந்து அழுகிய நிலையில் உடலில் இருந்த எலும்புகளை எடுத்து கடலில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று முத்துக்குமார் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரையும் கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்து வந்த போலீஸார், பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலையில் குற்றவாளிகள் குறிப்பிட்டுச் சொன்ன இடத்திலிருந்து விஜயகுமாரின் எலும்புகளை சேகரித்தனர்.