பழைய குற்றாலம் அருவி தடாகத்தில் சேதமடைந்த கம்பி வலை: குழந்தைகளுக்கு மீண்டும் பாதுகாப்பற்ற நிலை 


தென்காசி: பழைய குற்றாலம் அருவி தடாகத்தில் அமைக்கப்பட்ட கம்பி வலை சேதமடைந்ததால் குழந்தைகளுக்கு மீண்டும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக கம்பிவலை அமைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான குற்றாலத்துக்கு ஆண்டுதோறும் சாரல் சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சாரல் சீசன் மட்டுமின்றி மழைக் காலங்களிலும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். சிற்றருவி, புலியருவி ஆகியவை சிறுவர்கள் குளிப்பதற்கு ஏற்றவையாக உள்ளன.

பழைய குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவி தடாகத்தில் குழந்தைகளை குளித்து விளையாட அனுமதிக்கின்றனர். அருவியில் இருந்து விழும் தண்ணீர் இந்த தடாகம் வழியாக செல்கிறது. தடாகத்தில் உள்ள 4 துவாரங்கள் வழியாக ஆழமான பகுதியில் தண்ணீர் விழுந்து வெளியேறும்.

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பழைய குற்றாலம் அருவி தடாகத்தில் குளித்த 4 வயது பெண் குழந்தை, அதில் உள்ள துவாரத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, சுமார் 40 அடி பள்ளத்தில் விழுந்தது. இதைப் பார்த்த குழந்தையின் பெற்றோர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது விஜயகுமார் என்ற இளைஞர் துணிச்சலுடன் கீழே இறங்கி, பாறை இடுக்கில் சிக்கிய குழந்தையை பாதுகாப்பாக மீட்டு வந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தடாகத்தில் இருந்து தண்ணீர் வெளியே செல்லும் 4 துவாரங்களிலும் கம்பி வலை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் தடாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக குளித்து விளையாட முடிந்தது. இந்நிலையில், 4 துவாரங்களில் அமைக்கப்பட்ட கம்பிவலைகளும் சேதமடைந்து, இப்போது வலை எதுவும் இன்றி மீண்டும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பாக தரமான முறையில் துருப்பிடிக்காத கம்பி வலை அமைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

x