பாபநாசம்: பாபநாசம் வட்டத்தில், கர்ப்பிணி உட்பட 2 பேருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டதால், அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் பகுதியில் அண்மைக்காலமாக தொடர்ந்து இரவு நேரத்தில் மழையும் பகல் நேரத்தில் வெயிலும் அடித்து வருகிறது. மேலும், பருவநிலை மாற்றத்தால் கும்பகோணம் பகுதியில் உள்ள சிலர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களில் கபிஸ்தலம் மற்றும் புள்ளபூதங்குடியைச் சேர்ந்த கர்ப்பிணி உள்பட 2 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது சுகாதாரத் துறையினரால் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர்களை, சுகாதாரக் குழுவினர், கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு வாகனம் மூலம் அழைத்துச் சென்று, அங்கு உள்நோயாளிகளாக சேர்த்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் மேலும் சிலர் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பாபநாசம் வட்டம், கபிஸ்தலம், காமராஜர் நகரைச் சேர்ந்த 25 வயதான கூலித் தொழிலாளி ஒருவர் வெளி மாவட்டத்தில் வேலை செய்துவிட்டு, அண்மையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். தொடர்ந்து அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததால் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதேபோல் பாபநாசம் வட்டம், புள்ளபூதங்குடியில் 7 மாத கப்பிணிக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரையும், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சேர்த்து சிகிச்சையளித்து வருகிறோம். மேலும், அந்தப் பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட சுகாதார அலுவலகர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள், வீடுகளில் நீர் தேங்கி உள்ளதா, குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டு, அவற்றை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்வார்கள். தொடர்ந்து கிருமி நாசினி பவுடர், கொசுவை ஒழிக்கும் புகை அடிப்பது உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.'' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.